திருச்சி மாவட்டத்தில் தோட்டத்திலேயே பழுத்து அழுகும் நிலையில் வாழைத்தார்கள். கண்ணீரில் வாழை விவசாயிகள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தொட்டியம் பகுதியில் தோட்டத்திலேயே வாழைத்தார்கள் பழுத்து வீணாவதால் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பூவன், ரஸ்தாளி, ஏலரிசி, கற்பூரவள்ளி போன்ற வாழை ரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது.
காவிரி தண்ணீர் மூலம் பாசனம் பெறுவதாலும், இப்பகுதியில் உள்ள மண் வளத்துக்கு ஏற்றார் போல் இப்பகுதி வாழை பழங்கள் தனி சுவையாக இருப்பது சிறப்பு.
1 ஏக்கருக்கு சுமார் ஆயிரம் வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு அதற்கு களை எடுப்பது, உரம் இடுவது, மூங்கில் நடுவது என ஒரு மரத்திற்கு சுமார் ரூ.250 வீதம் ஏக்கருக்கு ரூ.2½ லட்சத்திற்கும் மேல் செலவாகிறது.
வாழைத்தார் ஒன்று அறுவடைக்கு வரும் போது ரூ.350-ல் இருந்து ரூ.450-வரை விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும்.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வாழைத்தார்களை வாங்க ஆளில்லாமல் மரத்திலேயே பழுத்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல கொரோனா ஊரடங்கு காரணமாக பல லட்சம் ரூபாய் நஷ்டமான சூழ்நிலையிலும் தற்போது கடன் வாங்கி செலவு செய்து சாகுபடி செய்த வாழை விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாழை விவசாயி ஒருவர் கூறியதாவது:-
வாங்க ஆளில்லாமல் மரத்திலேயே பழுத்து வீணாகும் அவல நிலை எங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை அரசு கவனத்தில் கொண்டு தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாழைப்பழங்கள் விற்க அனுமதியும், வேளாண் துறை தோட்டக்கலை துறை சார்பில் நடமாடும் வண்டிகள் ஏற்பாடு செய்து அதில் வாழைப்பழங்கள் விற்க மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும்.
லாபம் இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவு கூட கிடைக்காத நிலையில் இப்பகுதி விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் விளையக்கூடிய வாழை பழங்களை விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடு செய்து தருமாறு பகுதி விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.