திருப்பூரில் வீட்டில் வைத்து குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற நபர் கைது.
அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 3, லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 450 லிட்டர் சாராய ஊறலையும் கண்டுபிடித்து அழித்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஞாயிற்றுக்கிழமை, இரவு ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டது.
எனினும், பாதிப்பு தீவிரமானதால், 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதியில்லை.
அதேபோல், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் அரசு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கப்படாததால் குடிமகன்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
பல இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கொள்ளை விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று, குடிமகன்களுக்காக திருப்பூர் அருகே வீட்டில் வைத்து குக்கரில் சாராயம் காய்ச்சி விற்று வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடி பகுதியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி இவரது மகன் அண்ணாசாமி (வயது 58)
இவர் ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை மூகாம்பிகை நகர் அருகே காட்டுப் பகுதியில் உள்ள வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் விநாயகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று பார்த்த போது, குக்கரில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.
அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 3, லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர் மேலும் 450 லிட்டர் சாராய ஊறலையும் கண்டுபிடித்து அழித்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அண்ணாசாமி மீது வழக்கு பதிவு செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அவரை கைது செய்து தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.