சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 175 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு குழந்தைக்கு திடீரென காய்ச்சல் அறிகுறி இருந்தது.
இதையடுத்து காப்பகத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர், அந்த குழந்தையை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனையின் முடிவில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 15-ந்தேதி காப்பகத்தில் தங்கியிருந்த அனைத்து குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், 8 ஆசிரியர்கள் மற்றும் 66 குழந்தைகள் என 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் காப்பகத்துக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர், சென்னை மாநகராட்சி சார்பில் டாக்டர் மற்றும் 2 நர்சுகள் அடங்கிய குழு மூலம் குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
காப்பகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரை, கபசுர குடிநீர் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. காலை, மாலை ஆகிய 2 வேளையும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
காப்பகத்தில் எப்படி இத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.