சென்னை அடையார் சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா (வயது 38). இவர், தன்னுடைய கணவர் மணிகண்டன், 2 மகள்களை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் கும்பகோணம்.
கல்பனா, தஞ்சாவூரில் உள்ள ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தபோது முகநூல் மூலமாக ஆவடி அண்ணா நகரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (வயது35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்பனாவை சென்னை வரவழைத்த பிரசன்ன வெங்கடேஷ், திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து பிரசன்ன வெங்கடேஷ், தனது தந்தை ரங்கசாமி (வயது66), தாயார் விஜயா (வயது51), தங்கை புவனேஸ்வரி (வயது30) ஆகியோரை வீட்டுக்கு அழைத்து வந்து கல்பனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பிரசன்ன வெங்கடேசின் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை ஆகியோர் கல்பனாவிடம், “வீட்டுக்கு ஒருவரை அழைத்து வருவோம். அவருடன் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரசன்ன வெங்கடேசுடன் நீ படுக்கையில் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளிவிட்டு விடுவோம்” என்று மிரட்டினர்.
அப்போதுதான் கல்பனாவுக்கு, அவர்கள் 3 பேரும் தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்வது தெரிந்தது. அதற்கு மறுத்த கல்பனாவை அடித்து உதைத்ததுடன், அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தையும் பறித்துக்கொண்டனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்த கல்பனா, தனது கணவர் பிரசன்ன வெங்கடேஷ் வேலை செய்யும் தனியார் கம்பெனிக்கு சென்று விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதும், அந்த பெண்ணும் அதே நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வருவதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அத்துடன், பிரசன்ன வெங்கடேஷ், தன்னைபோல் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும், தற்போது மேலும் ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சிப்பதும் தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மோசடி செய்யும் நோக்கில், தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து ஆசை வார்த்தைகள் கூறி என்னை திருமணம் செய்து கொண்ட பிரசன்னவெங்கடேஷ் மற்றும் தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி போலீசில் கல்பனா புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்ன வெங்கடேஷ், அவருடைய தந்தை ரங்கசாமி, தாயார் விஜயா, தங்கை புவனேஸ்வரி ஆகிய 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 4 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.