ரெம்டெசிவிர் பெற பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம். உடனடியாக செயல்பாட்டை துவக்கியது தமிழக அரசு.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இதனால் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் உடனடியாக கிடைப்பதில் சிக்கல் நிலவியது.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட ஆறு இடங்களுக்கும் விற்பனையை விரிவுபடுத்தியது.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிகக் கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கமுடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இம்மருந்தை அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் வந்தன.
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதையடுத்து நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மே 18 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இணையதளம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில், இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. http://ucc.uhcitp.in/form/drugs என்ற இணையத்தில் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை விவரம், நோயாளியின் விவரம், தொற்று அறிகுறிகள், இணை நோய் உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட்டு, ரெம்டெசிவர் மருந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.