திருச்சியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த சனிக்கிழமை இரவு முதல் மூடப்பட்டது.
அதற்கு பதிலாக திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து காமராஜர் வளைவு வரை உள்ள மேலரண் சாலையின்(மேலபுலிவார்டு ரோடு) இருபுறமும் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடந்து வந்தது.
இரவு நேரம் செயல்படும் மொத்த காய்கறி விற்பனைக்கு வாகனங்களில் சரக்குகளை கொண்டு வந்து இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, மீண்டும் காந்தி மார்க்கெட்டிலேயே மொத்த வியாபாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று நேற்று மாலை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை காந்தி மார்க்கெட் மொத்தம் சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜூலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கே.என்.நேரு கூறுகையில், கொரோனா ஊரடங்கு முடியும் வரை எக்காரணம் கொண்டும் காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனைக்கு அனுமதி கிடையாது. பொதுமக்களின் உயிர் முக்கியம் என அரசு கருதுகிறது.
இன்னும் 10 நாட்களுக்குள் கொரோனா தாக்கம் முடிந்து விட்டால் மீண்டும் பழைய நிலை திரும்பி விடும். எனவே, மொத்த வியாபாரத்திற்கு வேறு மாற்று இடம் இருந்தால் சொல்லுங்கள்’ என்றார்.
அதைத்தொடர்ந்து மொத்த வியாபாரிகள் தரப்பில், வெல்லமண்டி சாலை (காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையம் முன்பிருந்து) மணிக்கூண்டு வழியாக, பாலக்கரை மீனாட்சி மண்டபம், மயிலம் சந்தை வழியாக பாலக்கரை ரவுண்டானா வரை மொத்தம் வியாபாரமான நாட்டு காய்கறி, இங்கிலீஸ் காய்கறி உள்ளிட்டவை விற்பனை செய்ய அனுமதியுங்கள்.
தக்காளி வழக்கம்போல எடத்தெரு ரோட்டிலும், மதுரம் மைதானத்தில் எலுமிச்சை வியாபாரம் நடக்கும் என்றனர்.
அதற்கு அமைச்சரும் சரி என்று சொல்லி விட்டு இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் பேசி விடுகிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.