திருச்சியில் நாளை முதல் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சென்னையில் உள்ளது போல் திருச்சியிலும் டிஆர்ஓ தலைமையில் கொரோனா அவசர உதவிக்கு குழு அமைக்கப்பட உள்ளது. டிஆர்ஓ கீழ் இரண்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களை எந்த நேரத்திலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் படுக்கை வசதி போன்ற விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சென்னையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் 5ம் ஆண்டு பயிலும் பயிற்சி மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் திருச்சியிலும் 5ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து 7 ஆயிரம் மட்டுமே வருகிறது. இதில் திருச்சிக்கு 300 கிடைக்கிறது. திருச்சியின் தேவை 500 ஆக உள்ளது. கூடுதலாக பெறுவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காந்தி மார்க்கெட்டை ஜி கார்னருக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அதனால் திருச்சி மேல புலிவார் ரோடில் மரக்கடை முதல் காமராஜர் வளைவு வரை காய்கறி விற்பனை செய்ய காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும்.
இங்கு தேவைப்பட்டால் மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு கொட்டகை அமைத்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சமூக இடைவெளியுடன் அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை இங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.
திருச்சியில் தற்போது வரை 32 ஆயிரத்து 992 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 ஆயிரத்து 827 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 5,797 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 308 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதேபோல் பாரத மிகு மின் நிறுவனத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
திருச்சியில் நாளை முதல் கொரோனா ஊரடங்கை கடுமையாக அமல் படுத்தும் வகையில், தேவையின்றி வெளியில் வருபவர்களை எச்சரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளில் தான் கொரோனாவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆனால் அரசு மருத்துவமனையில் சரியாக இருக்காது என்று மக்கள் நினைக்கின்றனர். அதனால் அவர்கள் பணத்தை கொடுத்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்கின்றனர். மக்களை கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு தான் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை வசதிகள் வெளியில் எங்கும் இல்லை.அதேபோல் சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது முதலமைச்சர் உட்பட அனைவரும் கொரோனா தடுப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். இதர பணிகளில் கவனம் செலுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றார்.
முன்னதாக கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் திவ்யதர்ஷினி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரராஜன், காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ், அப்துல் சமத், பழனியாண்டி, கதிரவன், ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.