Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்த ஆண்டின் முதல் புயல் தாக்டே மே 14 அன்று உருவாகும்.

0

2021-ஆம் ஆண்டின் முதல் புயல், மே 14-ஆம் தேதி அரபிக்கடலில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மே 14-ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி பின் மே 15-ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. இது அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின், வடமேற்கு திசையை நோக்கி நகரும். இது குஜராத் அல்லது பாகிஸ்தானில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக இருக்கும் புயலுக்கு ‘தாக்டே’ (Tauktae) புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்பெயரை சூட்டியது மியான்மர் நாடு. தாக்டே என்றால் அதிகப்படியான ஒலி எழுப்பும் ஊர்வனம் என்பது அர்த்தம்.

தாக்டே புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கடலோர காவல் படை அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயலாக மாறி, மே 15-ஆம் தேதி மங்களூர் கரையில் இருந்து 100 கிமீ தூரத்தில் நெருங்கி வரும் போது கேரளாவில் பலத்த காற்றுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால், லட்சத்தீவுகள், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, மே 14,15 தேதிகளில் தமிழகத்தின் கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் தமிழக கரையோர பகுதிகளில் சூறை காற்றும் வீசக்கூடும்.

மே 16 திங்களன்று புயல் வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் என்பதால் மழை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும் மே 19 புதன் வரை தமிழகத்தில் வானம் மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை மறுநாள் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

எனவே கடலோர பகுதியில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ரெட் அலர்ட் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

Leave A Reply

Your email address will not be published.