தமிழகம், மாராட்டியம் உள்ளிட்ட 5 மாநிலங்களில், தலா 30 மாவட்டங்களில், கொரோனா தொற்று 10 சதவீதத்தை விடவும் அதிகமாக உள்ளது.
கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தலா 20 மாவட்டங்களில் இந்த நிலை காணப்படுகிறது. கேரளா, டெல்லி உள்ளிட்ட மேலும் 8 மாநிலங்களில் தலா 10 க்கு மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று 10 சதவீதத்தை தாண்டி உள்ளது.
தொற்று விகிதம் 10 ஐ தாண்டினால் அந்தந்த மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்காம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கோவா, புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று விகிதம் அபாயகட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 700 க்கும் அதிகமான மாவட்டங்களில், 533 மாவட்டங்களில் நடத்தப்படும் சோதனைகளில் 10 சதவீதத்தை விடவும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில், கிராமபுறங்களில் தொற்று அதிகம் பரவுவதை இது காட்டுகிறது. இந்த நிலையில், இரண்டாம் அலை வேகமாக இருப்பதால், கொரோனா மொத்த சோதனைகளில் ரேபிட் ஆன்டிஜன் சோதனைகள் 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா கேட்டுக் கொண்டுள்ளார்.
கிராம புறங்களில் சோதனைகளை அதிகரிக்க அங்குள்ள பள்ளிகளிலும், சமுதாய நலக்கூடங்களிலும் ரேபிட் ஆன்டிஜன் சோதனைகளை அதிக அளவில் நடத்த வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
வைரஸ் தொற்று தேசிய அளவில் 21 சதவீதமாக இருக்கும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் அது 42 சதவீதமாக அதிகரித்து காணப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.