திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வயதான தம்பதியினர் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 85). தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். கணவர் இறந்த செய்தி அறிந்த அதிர்ச்சியில் அவரது மனைவி சாந்தா (75) திடீரென மயங்கி விழுந்து இறந்தார். ஒரே நேரத்தில் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஸ்டாலின் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் தங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான பீதி மக்களிடம் நிலவி வருவதால் மாநகராட்சி நிர்வாகம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.