Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இரவு நேர ஊரடங்கில் மத்திய பேருந்து நிலையத்தில் காத்துக் கிடக்கும் பயணிகள்.

0

இரவு நேர ஊரடங்கு
அறிவித்து 10 நாள்களாகியும் தினமும் இரவில் மத்திய
பேருந்து நிலையத்தில் காத்து இருக்கும் பயணிகள்.

இரவு நேர ஊராங்கு தொடங்கி 10 நாள்களாகியும், பேருந்துகள் இயக்கப்படும் நேரத்திற்குள் பயணிக்க முடியாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தினசரி இரவில் காத்துக்கிடப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2 ஆவது அலையில் அதிகளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு 10 முதல் மறுநாள் அதிகாலை 4 வரையில் இரவுநேர பொதுமுடக்கத்தையும், வார நாள்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழுநேர பொதுமுடக்கத்தையும் அரசு அறிவித்துள்ளது.

இதனையொட்டி, குறிப்பிட்ட காலத்துக்குள் அதாவது, பேருந்து இயக்கம் நிறுத்தப்படுவதற்கு முன் பொதுமக்கள் சென்றடையவேண்டிய இடத்தினை அடையும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகால அட்டவணையும் அறிவிக்கப்பட்டு, பகல் நேரங்களில் கூடுதல் பேருந்து வசதிகளும் இயக்கப்படுகின்றன.

மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சியிலிருந்து பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்து கால அட்டவணையும் வெளியிடப்பட்டு, அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பிற பகுதிகளிலிருந்தும் திருச்சிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படுகின்றது.

இரவு நேர ஊரடங்கு அறிவித்து 10 நாளான நிலையிலும் தினமும் இதுபோன்று திருச்சி பேருந்து நிலையங்களில் இரவு நேரத்தில் பேருந்துகளுக்காக காத்துக்கிடப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதனால், போலீசாருக்கும் பயணிகளுக்கும் தினசரி வாக்குவாதம் ஏற்படுகின்றது. இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், பொதுமக்களுக்கு ஊரடங்கு குறித்த தகவல் தெரிந்தாலும், எப்படியாவது சென்று விடலாம் என்ற நம்பிக்கையிலும், ஒரு விதமான அசட்டு தையரித்திலும் பயணித்து இதுபோல காத்துக்கிடக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றனர். பயணிகளிடம் கேட்டபோது, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பு வந்துவிடலாம் என புறப்பட்டோம், ஆனால் பேருந்து தாமதமாக வந்ததால் மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை என்கின்றனர்.

மேலும் சிலர் ஏதாவது முக்கிய காரணங்களை கூறியபடி பயணித்து காத்துக்கிடக்கும் நிலையே தொடர்ந்து வருகின்றது.
அவ்வாறு இரவு நேரங்களில் பேருந்து நிலையங்களில் காத்திக்கிடப்போர் மறுநாள் அதிகாலை 4 மணிக்குப் பின்னர் இயக்கப்படும் பேருந்துகளை பிடித்து ஊர் செல்கின்றனர். மேலும், முன்பதிவு செய்து இரவு நேரங்களில் ரயில்கள் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் குறையவில்லை. குறிப்பாக நேடுந்தூர பயணிகள் ரயில் பயணங்களுக்காக இரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.