தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து அந்த 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தின் வாயிலாக கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, அந்த 6 மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதே நேரம் இன்று மருத்துவ நிபுணர்கள் உடனான உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே வரும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு விதிக்கலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டங்களின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.