உலக வன தினத்தை முன்னிட்டு இயற்கை வனங்களை மீட்டெடுக்க ஒரு முன் முயற்சியாக, சிறிய மற்றும் குறு வனங்களையும் உருவாக்க உறுதி பூண்டு தேசிய தொழில் நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி ஜப்பான் முறையான மியாவாக்கி என அழைக்கப்படும் குறுவனத்தை வளாகத்தில் உருவாக்கிட திட்டமிட்டு 21-03-2021 அன்று இயக்குநர் முனைவர் மினி சாஜி தாமஸ் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்கள்.
மியாவாக்கி (குறு வனக் காடு உருவாக்குதல்) நிகழ்ச்சியில் தேசிய தொழில் நுட்பக் கழகத்தின், பதிவாளர் (பொறுப்பு) முனைவர் அறிவழகன் மற்றும் தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் பசுமை பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
குறு வனத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உருவாக்கும் முறையான மியாவாக்கி என்னும் முறையை ஜப்பானின் தாவரவியலாளர் முனைவர் அகிகரா மியாவாக்கி உருவாக்கினார்.
மியாவாக்கி முறையில் உருவாக்கப்படும் குறு வனங்கள் 10 மடங்கு வேகமாகவும் சிறு, குறு வனங்கள் 30 சதவீதம் அடர்த்தியாக இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து முனைவர் தாமஸ் கூறியதாவது:
இந்த மியாவாக்கி குறு வனத்தில் 50 வகையான பூர்வீகமரக்கன்றுகளும், 10 வகையான மூலிகைத் தாவரங்களும் நடத் திட்டமிடப்பட்டுள்ளது, பட்டாம் பூச்சிகளையும், பறவைகளையும் ஈர்ப்பதற்காக பழமரக் கன்றுகளும் இந்த குறு வனத்தில் நட இருப்பதாகக் கூறினார்
மரக்கன்றுகள் அனைத்தும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை நடவுப்பண்ணைகளிலிருந்து இருந்து பெறப்பட்டது. தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் பசுமை ஆலோசனை குழு ஸ்ரீரங்கத்தில் உள்ள மியாவாக்கி காடுகளை
பார்வையிட்டு, திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன் இந்த குறு வனம் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது உருவாக்கப்படும் மியாவாக்கிக்காடு மரம் வளர்வதற்கான இடமாக மாற்ற வளாகத்தில் சேகரித்த காய்ந்த இலைகள், சருகுகள், திருச்சி மாநகராட்சி நன்கொடையாக அளித்த 84 டன் மண்புழு உரமும், எங்களது வளாகத்தில் உரக்கிடங்கில் தயாரான 20 டன் மண்புழுஉரமும் உபயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த குறு வனம் 0.58 ஏக்கர் பரப்பளவில் 4000 மரக்கன்றுகள் நான்கு நாட்களுக்குள் நடப்படும், வளாகத்தில் குடியிருப்போர் இந்த குறு வனத்தில் மரக்கன்றுகளை நட விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
இதைப் போன்று மேலும் சில மியாவாக்கி எனப்படும் குறு வனங்களை வளாகத்தில் உருவாக்க உள்ளதாகவும் இயக்குநர் கூறினார்.