U
திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும்
172 வேட்புமனுக்கள் ஏற்பு 42 தள்ளுபடி.
திங்கள்கிழமை இறுதிப்பட்டியல் முடிவாகும்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 172 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 42 நபர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி, 19 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டப் பேரவைத் தொகுதிகளும் சுமார் 256 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இதில் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், அவர்களுக்கு மாற்று வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் அடங்குவர்.
சனிக்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் நடைபெற்றதை அடுத்து, முக்கிய அரசில் கட்சி வேட்பாளர்கள் உள்பட 256 தாக்கல் செய்த மனுக்களில் 172 பேரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 42 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நிறைவு பெறாத காரணத்தால் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை.
திங்கள் கிழமை வரையில் மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மாற்று வேட்பாளர்கள் உள்பட வாபஸ் பெறுவோரை கணக்கிட்டு அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்.