இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது, 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது, 4-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது.
முதல் 3 ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றன. இதனால் ‘டாஸ்’ முக்கியத்துவம் பெற்றது. ஆனால் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்து அசத்தியது. சூர்யகுமார் யாதவின் அரைசதத்தின் உதவியுடன் 185 ரன்கள் குவித்த இந்தியா, எதிரணியை 177 ரன்னில் மடக்கி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் இறங்குவார்கள்.
4 ஆட்டங்களில் ஆடியுள்ள தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 2 டக்-அவுட் உள்பட வெறும் 15 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உடல்தகுதியை எட்டி விட்ட போதிலும் கடைசி ஆட்டத்தில் சேர்க்கப்படுவது கேள்விக்குறி தான். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முந்தைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அவரது சிக்கனமான பந்துவீச்சு இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா, ராகுல், சூர்யகுமார், கேப்டன் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என்று நட்சத்திர பட்டாளங்களுடன் மிக வலுவாக காணப்படுகிறது. ஆனால் அனைத்து வீரர்களும் ஒருசேர கைகொடுத்தால் எதிரணி நிலைமை திண்டாட்டம் தான். கோலி (2 அரைசதத்துடன் 151 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (121 ரன்) தொடர்ந்து நன்றாக ஆடியிருக்கிறார்கள். மற்றவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்தும், பேட்டிங், பந்து வீச்சில் சவால்மிக்க அணியாகவே தென்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லரும் (120 ரன்), ஜாசன் ராயும் (144 ரன்) கணிசமான ரன்கள் சேர்த்துள்ளனர். உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனாக திகழும் டேவிட் மலான் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்த தொடரில் 4 ஆட்டத்தில் ஆடி 80 ரன் (77 பந்து) மட்டுமே எடுத்திருப்பது அந்த அணியை கவலையடையச் செய்துள்ளது.
பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சரும் (7 விக்கெட்), மார்க்வுட்டும் (5 விக்கெட்) மிரட்டுகிறார்கள். கடந்த ஆட்டத்தில் அவர்களின் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட சமாளித்தனர். என்றாலும் அவர்கள் அபாயகரமான பவுலர்கள் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் சரிசம பலம் பொருந்திய அணிகள் மல்லுகட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 5 தொடர்களை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி தனது கடைசி எட்டு 20 ஓவர் தொடர்களை இழந்ததில்லை. எனவே யாருடைய வெற்றிப்பயணம் முடிவுக்கு வரும் என்பது இன்று தெரியும்.