நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து
நிலையம் அமைய அதிமுகவுக்கு வாக்களியுங்கள்
அதிமுக வேட்பாளர் பகுமார் தீவிர பிரசாரம்
திருச்சி, திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய அதிமுகவுக்கு வாக்களியுங்கள் எனக்கூறி வேட்பாளர் ப. குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை, திரு.வி.க திடலில் உள்ள விநாயகர் கோவிலில் அதிமுக வேட்பாளர் ப.குமார் ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களிடத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, தன்னை திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யுமாறு வேண்டுகோள்விடுத்து வாக்குகள் சேகரித்தார்.
பின்னர் மேலக் கல்கண்டார் கோட்டையில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கும் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குச் சேகரிப்பின்போது, அவர் பேசுகையில்,
திமுக ஆட்சியில் தினசரி 18 மணி நேரம் இருந்த மின் வெட்டை சீராக்கி, தற்போது குடும்பத்துக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது அதிமுக ஆட்சி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவே, விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கி வருகிறார். இதனால் விவசாய உற்பத்திப் பொருட்கள் அதிகரிப்பதுடன், விலைவாசியும் குறைந்துள்ளது. மேலும் பலமக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு.
திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மின் வெட்டு தொடரும், விலை உயர்வு அதிகரிக்கும் அது தேவையா என்பதை சீர்தூக்கி பாருங்கள். ஏற்கெனவே இத்தொகுதி உறுப்பினராக இருந்தவர் என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என பாருங்கள். அவரை மீண்டும் கொண்டு வந்தால் என்னாவாகும்.
கடந்த ஆறுமாதகாலத்தில் இப்பகுதியில் இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 6.60 கோடியில் சாலைப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலால் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடரும். நவல்பட்டு பகுதியில்தான் திருச்சியின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். அதற்கா அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளன. இதுபோல மேலும் பல திட்டங்கள் இப்பகுதியில் தொடர எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என பேசி வாக்குகள் சேகரித்தார்.
அதிமுகவினர் சார்பில் அவருக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்வின் போது, அதிமுக பொன்மலை பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், தண்டபாணி, முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன், ராஜாமணிகண்டன், கும்பக்குடி கோவிந்தராஜ் ஐடி பிரிவு சுரேஷ் , தாமாக நிர்வாகிகள் கோபால், செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக முத்தரையர் சங்க மாநில தலைவர் ஆர்.விஸ்வநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.