தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நேற்று முன்தினம் முதல் வேட்புமனுதாக்கல் செய்து வருகின்றனர். மனு தாக்கலுக்கு 19-ந்தேதி கடைசி நாளாகும்.
இந்த தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இதற்காக அவர் இன்று இரவு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து காரில் சேலம் செல்கிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு தங்கும் அவர் நாளை காலை 7 மணிக்கு சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு செல்கிறார்.
பின்னர் அருகில் உள்ள பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில்முன்பு இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் வழிபாடு நடத்திவிட்டுதான் பிரசாரம் தொடங்குவது வழக்கம்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி சென்றாய பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய பின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். தற்போது தனது தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை இந்த கோவில் முன்பு இருந்து நாளை தொடங்குகிறார்.
பின்னர் நங்கவள்ளி, வனவாசி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கிறார். இதை தொடர்ந்து எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
இதன்பிறகு எடப்பாடி ஒன்றிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.
மாலையில் எடப்பாடியில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதை தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி செல்லும் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அவர் பிரசாரம் செய்யும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் நாளை பகல் 12.30 மணி அளவில் தனது வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
சென்னையில் அவர் திறந்த ஜீப்பில் தொண்டர்கள் புடை சூழ அயனாவரம் செல்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அவருடன் செல்கிறார்கள். மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
அயனாவரம் பஸ் டெப்போ அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ததும் நிருபர்களை சந்திக்கிறார். அதன்பிறகு அங்கு திரளாக கூடியிருக்கும் மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும் பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுகிறார். இவர் தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரசை எதிர்த்து இந்த தொகுதியில் களம் காண்கிறார். கமல்ஹாசன் போட்டியிடுவதை அடுத்து இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கி விட்டது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் நாளை வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 9.30 மணிக்கு கமல்ஹாசன் கோவை செல்கிறார்.
அங்கு அவரை ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். அவர்களது வரவேற்பை பெற்று கொள்ளும் அவர் காரில் நேராக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்கிறார்.
அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் காலை 11.30 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்கிறார். வேட்புமனுதாக்கல் செய்யும் இடம், இவர் தங்கியிருக்கும் ஓட்டல் அருகேயே உள்ளதால் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் நடந்து சென்று மனுதாக்கல் செய்யலாம் என தெரிகிறது.
வேட்புமனுதாக்கல் முடிந்ததும் கமல்ஹாசன் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 6 மணியளவில் ராஜவீதி தேர்நிலை திடலில் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு கூடியிருக்கும் மக்களிடையே தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்கிறார்.
கமல்ஹாசனின் கோவை வருகையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை நல்லநாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய உள்ளனர். இதனால் தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர்கள் அமர விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். திருவொற்றியூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நாளை அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
இன்று மாலை திருவொற்றியூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் சீமான் சுங்கச்சாவடியில் இருந்து அதனை தொடங்குகிறார். 9, 10, 12, 13, 14 ஆகிய வட்டங்களில் பொதுமக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரிக்கிறார்