மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
2019 பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் 3.7 சதவீத வாக்குகள் வாங்கி இருக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் அதை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்ய மாட்டேன். ஏனென்றால், இதுபோன்ற ஆய்வுகள் தவறாக போகக்கூடும்.
மக்களிடத்தில் இருந்து வரும் ஈர்ப்பு, எதிர்வினைகள் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம், மக்களிடம் இருந்து எங்களுக்கு புதிய ஆதரவு அலை கிடைத்து வருகிறது.
2019-ல் நாங்கள் அரசியலில் புதியவர்களாக இருந்தோம். இப்போது பலவற்றை சரி செய்துள்ளோம். நாங்கள் ஒரு எண்ணிக்கையை கொடுத்தால் அது மூன்றாக உருவாக வேண்டும். அது தான் வெற்றி. அந்த வெற்றியை அடைய நாங்கள் விரும்புகிறோம். அது எங்களுடைய எண்ணம்.
10 சதவீதத்துக்கு மேல் நாங்கள் ஆதரவுகளை பெற்றால், நாங்கள் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என்று ஆய்வாளர்கள் சொல்லலாம்.
நாங்கள் விளையாட்டில் இருப்பதை மட்டுமே விரும்பவில்லை. இந்த விளையாட்டிலேயே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.
இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதுதான் எங்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு. தேர்தலில் என்ன நடந்தாலும் மக்கள் நீதி மய்யத்தை தமிழ்நாடு அரசியல் வரைபடத்தில் இருந்து நீக்கிவிட முடியாது.
இதுதான் எங்கள் வாழ்க்கையில் முதல் 3 ஆண்டுகளில் இருக்க வேண்டிய மிக முக்கியமான இடம்.
தமிழக அரசியலில் உள்ள முக்கிய இரு கட்சிகளுமே எங்களுக்கு எதிரிகள் தான். ஒரு கட்சி இப்போது ஆட்சியில் உள்ளது. மற்றொரு கட்சி ஆட்சியில் இல்லை. அதில் ஒன்று விஷப்பாம்பு. அதற்கு இப்போது தலை இல்லை, வால் இருக்கிறது.
மற்றொரு கட்சியும் இந்த கட்சிக்கு சமமானதாகவே இருக்கிறது. அந்த கட்சிக்கு தலை இருக்கிறது. ஆனால் அது உயிருள்ள உதைக்கக் கூடிய விஷம் கொண்ட விலங்கு.
அவர்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும். நான் கூறிய கருத்து யார் மீதான தனிப்பட்ட தாக்குதலும் அல்ல.
எனது கட்சியில் போட்டியிடுபவர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்ல. இதற்கு முன்பு சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களை இதில் பயன்படுத்துகிறோம்.
அவர்கள் பணம் படைத்தவர்கள் அல்ல. ஆனால் கட்சியை நடத்துவதற்கு தகுதி உடையவர்கள்.
நான் எனது வேலைகளின் மூலமாக பணத்தை பெறுகிறேன். அது கட்சி நடத்துவதற்கு உதவுகிறது. அனைத்தையும் நான் இதற்கு செலவு செய்து இருக்கிறேன். இது போதாது. இது ஒரு மக்கள் முதலீடு.
அரசியலில் செயல்படுவது என்பது சவாலான விஷயம். சினிமா துறையில் நான் பல விஷயங்களை சாதித்து இருக்கிறேன். அரசியலிலும் வெல்வேன். ஆனால் அது எளிதான விஷயம் அல்ல.
நான் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என ஆலோசனைகள் வந்தது. ஆனால் அப்படி போட்டியிட்டால், அதை சாதியோடு இணைத்து சொல்லி விடுவார்கள்.
சாதியோடு ஒப்பிடுவது எனக்கு பிடிக்காத விஷயம். எனவேதான் நான் கோவையை தேர்வு செய்தேன். இந்த மண் மத ஒற்றுமையின் விளையாட்டு மைதானமாக இருக்கிறது.
சில முதல்-அமைச்சர்கள் உட்பட ஊழல் மிகுந்த அமைச்சர்களின் பகுதியாக இது உள்ளது. மேலும் பா.ஜனதாவும் இங்கு போட்டியிடுகிறது. கோவையில் இப்போதுவரை எனக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அது சிறப்பாக இருக்கும்.
தொங்கு சட்டசபை ஏற்பட்டால், எங்கள் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்தவரை நாங்கள் மற்றொரு தேர்தலை மக்கள் மீது திணிப்பதற்கு விரும்பமாட்டோம். ஆனால், இரண்டு மோசமான நபர்களை தேர்வு செய்வதைவிட மற்றொரு தேர்தலுக்கு இழுத்து செல்வதை நாங்கள் செய்வோம்.
எடப்பாடி பழனிசாமி அல்லது ஸ்டாலின் இருவரில் யாரை முதல்- அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டால், நான் யாரையுமே விரும்பவில்லை. இதுதான் ஒரே வழி என்றால், நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழக அரசியலை பொறுத்தவரை நாங்கள் தான் முதன்மை அணி. மக்களின் நல்லெண்ணத்தை நாங்கள் செயல்படுத்துபவர்கள். மற்ற கட்சிகள் எல்லாம் 33 சதவீதத்துக்கு மேல் கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் மக்கள் ஓட்டுபோடவேண்டுமா?
நாங்கள் ஆட்சியை பிடிப்பது என்பது நீண்ட கால பயணமாக இருக்கலாம். அதற்காகத்தான் கட்சியை தொடங்கி இருக்கிறோம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.