இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறை, காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி முதல் கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் 28 நாட்கள் கழித்து நேற்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் 2-வது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அப்போது மருத்துவமனை டீன் வனிதா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.