திருச்சியை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில், எனது கணவர் இறந்து விட்டதால் மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறேன். வீட்டின் ஒரு பகுதியில் தனியாக டிபன் கடை நடத்தி வருகிறேன்.
இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் என் கடை முன்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நான் அவருக்கும், அவருடன் பணியாற்றிய போலீசாருக்கும் டி மற்றும் டிபன் தயார் செய்து கொடுத்தேன்.
இதனால் தினமும் சப்-இன்ஸ்பெக்டர் என் கடைக்கு வந்து சென்றார். என் குடும்ப வாழ்க்கையை தெரிந்து கொண்ட அவர் ஒரு நாள் போனில் ஆறுதலாக பேசினார்.
அப்போது தானும் மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், தனக்கும் ஒரு ஆதரவு தேவைப்படுகிறது. ஆகவே என்னை திருமணம் செய்து கொண்டு மனைவியாக ஏற்றுக்கொள்வதாக ஆசைவார்த்தை கூற நானும் அவரை முழுமையாக நம்பிவிட்டேன். பின்னர் என்னுடன் தனிமையில் அவர் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் வீடு கட்டுவதற்கு என்னிடம் பணம் கேட்டார்.
நான் எனது மகள் திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.5 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகளை கொடுத்தேன். ஒரு மாதத்தில் லோன் கிடைக்கும். அப்போது பணம், நகை திருப்பி தருவதாக உறுதி அளித்தார்.
இந்த நிலையில் அவர் மனைவியுடன் வாழ்ந்து வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, இதெல்லாம் எனக்கு டைம் பாஸ். உன்னை திருமணம் செய்ய முடியாது. நகை, பணம் திருப்பி தர முடியாது. மீறி புகார் அளித்தால் ரவுடிகளை ஏவி குடும்பத்தை தீர்த்து கட்டிவிடுவேன் என கூறினார். எனவே சப்- இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணம்-நகையை மீட்டு கொடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு கமிஷனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி இன்று அவரிடம் கேட்டபோது, சப்-இன்ஸ்பெக்டர் மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.