Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நாளை தொடக்கம்.

0

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். டிரா செய்து தொடரை வெல்லுமா? அல்லது இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையவும் இதே நிலைதான். இந்த டெஸ்டில் தோல்வியை தவிர்க்க வேண்டும். இதனால் இந்திய வீரர்கள் டிரா அல்லது வெற்றிக்காக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

இங்கிலாந்து அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி ஒருவேளை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வாய்ப்பை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

கடந்த டெஸ்ட் போட்டி 2 தினங்களிலேயே முடிந்தது. இதனால் அகமதாபாத் ஆடுகளம் குறித்து மிகுந்த சர்ச்சை எழுந்தது. டெஸ்ட் போட்டிக்கு உகந்தது இல்லை என்று பிட்ச் குறித்து விமர்சிக்கப்பட்டது.

இதனால் 4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஆடுகளமும் சுழற்பந்துக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.ஆனால் உறுதியாக எதுவும் தெரியவில்லை.

பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரி‌ஷப்பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 296 ரன்கள் எடுத்துள்ளார்.

அஸ்வின் 3 டெஸ்டிலும் சேர்த்து 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கிறார். இதேபோல அக்‌ஷர் படேல் 2 டெஸ்டில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இதனால் அந்த வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

இரு அணிகளும் மோதிய 125 டெஸ்டில் இந்தியா 28-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 49 டெஸ்ட் டிரா ஆனது.

நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.