Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலை திருச்சியில் …..

0

திருச்சி, கொள்ளிடக்கரையில் அமைகிறது
37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக் கரையில் சிலை மற்றும் கோயில் அமைக்கப்பட உள்ள இடம்

திருச்சி மேலூர் பகுதியில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவுபெறவுள்ளது.

திருச்சியில் அமைய உள்ள 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை

ஆஞ்சநேயருக்கு தமிழகத்தில் சென்னை நங்கல்லூரில் 33 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக நாமக்கல்லில் 18 அடிய உயரத்திலும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதைவிட உயரமான வகையில் அதாவது 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் பணிகள் திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் நடைபெற்று வருகின்றது.

ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உபன்யாசகர் இரா. வாசுதேவன்.

மேலூரில் கொள்ளிடம் ஆற்றுக்கரையில் இதற்காக கோயில் மற்றும் பீடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் சிலை பிரதிஷ்டை செய்யும் பணிகள் நடைபெறும் என கோயில் நிர்வாக அறங்காவலர் இரா. வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி தெற்கு சித்திரை வீதியில் வசித்து வரும் வாசுதேவன், கடந்த 40 ஆண்டுகாலமாக சுமார் இரண்டரை அடி உயர ஆஞ்சநேயர் சிலையை வைத்து வழிபடுவதுடன், ஆஞ்சநேயர் அருள் பெற்று பலருக்கு அருள்வாக்கும் கூறி வருகிறார். இளைஞராக இருந்தபோது வேலை தேடி அலைந்தபோது, ஸ்ரீராமஜெயம் எழுதி கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டு அதற்கான எழுத்துப் பணியைத் தொடங்கியுள்ளார். ஆனால் தொடங்கிய சில நாள்களிலேயே கனவில் வந்த ஆஞ்சநேயர், ஏன் இந்த வேலை எனக்கேட்டதாகவும், வேலையில்லை எனவே வேலை தேடி இந்த வேலை செய்கிறேன் என வாசுதேவன் கூறினாராம். அதற்கு, இரண்டரை அடியில் எனது சிலை உன்னைத் தேடி வரும், அந்த சிலையை வைத்து பூஜை செய்வதுதான் உனக்கு வேலை. எனவே அதை செய்துவா எனக்கூறி மறைந்தாராம் ஆஞ்சநேயர். அடுத்த சில தினங்களிலேயே கனவில் ஆஞ்சநேயர் கூறியதைப்போலவே சிலை அவரைத் தேடி ஒரு நபர் மூலம் வந்து சேர்ந்ததாம். அதன் பின்னர் ஆஞ்சநேயரை வைத்து பூஜை செய்யத் தொடங்கி பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்வாக்கும் கூறி வருகிறார் வாசுதேவன்.

37 அடியில் ஆஞ்சநேயர் சிலை :

திருச்சியில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைப்பது குறித்தும் கனவில் வந்ததுதான் என்கிறார் அவர். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நான் அதிகம் படிக்கவில்லை, சாஸ்திர சம்பிர்தாயங்களும் நானறியேன், வாஸ்து, ஜாதகம் என எந்த விவரமும் தெரியாது. ஆனால் ஆஞ்சநேயர் அருளால் இவை அனைத்துமின்றி எந்த விஷயம் கேட்டாலும் பதில் அளிக்க முடியும். என்னை நாடி ஆலோசனை கேட்டு வரும் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருளுடன் அருள் வாக்கு கூறுவதுடன், பரிகாரத்துக்கான வழிமுறைகளும் கூறி வருகிறேன். பரிகாரம் என்பது வேறு ஏதுமல்ல. எந்த பிரச்னைக்கு எந்த சாமியை எவ்வாறு வணங்குவது என்பது மட்டுமே. இவற்றுக்கான நான் கட்டணங்களும் க ட்டாயப்படுத்துவதில்லை. பக்தர்கள் நினைக்கும் தொகையை எனக்கு காணிக்கையாக அளித்துச் செல்கின்றனர். அதை வைத்துதான் எனது குடும்பத்தையும் கவனித்து தற்போது, ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டவும் முடிவு செய்துள்ளேன்.

கோயில் அதாவது சிலை அமைப்பது குறித்து ஆஞ்சநேயரிடம் தியானத்தில் நான் கேட்டபோது அவர் கூறியதன் அடிப்படையில் கோயில் அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றது. இதற்காக சுமார் இது வரையில் சுமார் 48 லட்சம் செலவாகியுள்ளது. அது எப்படி வந்தது எப்படி செலவாகின்றது என்பதெல்லாம் தெரியாது. எங்கிருந்தோ வரும் பக்தர்கள் நன்கொடையாக தருகின்றனர். அதை வைத்து சிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. அநேகமாக அடுத்த ஓரிரு மாதங்களில் சிலை அமைக்கும் பணிகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். முதலில் 33 அடி உயர சிலைதான் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 40 அடியில் ஒரே கல் கிடைத்தவுடன் 37 அடி உயர சிலை அமைக்க மாற்றி முடிவு எடுத்தோம்.
இதற்காக நாமக்கல் அருகில் சுமார் 105 டன் எடையிலான 40 அடி உயரமுள்ள ஒரே கல் வாங்கப்பட்டு, அதில் கலை நயத்துடன் சிலை வடிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

எனது மகன் ராகுல்சுந்தர்ராஜன் தலைமையில், துர்கா சிற்பக் கலைக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிலை வடிக்கும் பணிகள் முடிந்து மெருகூட்டும் பணிகள் நடந்து வருகின்றன, அதனை திருச்சி கொண்டு வரவேண்டிய பணிகள்தான் பாக்கி. திருச்சி மேலூரில் கொள்ளிடம் கரையோரத்தில் மேற்கு பார்த்த இடம் உள்ளது அங்கு போ என உத்தரவிட்டார் ஆஞ்சநேயர். அதைப்போலவே சென்று விசாரித்தபோது, அங்கிருந்த ஒரு இடத்தின் நில உரிமையாளர் விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். நிலத்தை வாங்கி தற்போது அங்கு சிறிய அளவில் ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபட்டு வருகிறோம். மேலும், நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளும் வடிவமைக்கப்பட்டு வந்துவிட்டன. தவிர கோ சாலையும் அங்கே நடத்தப்பட்டு வருகின்றது. சிலை அமைப்பதற்கா பீடம் அமைக்கப்பட்டுள்ளது. சிலை வந்த பின்னர் பிரதிஷ்டை செய்து அதன் பின்னர் அங்கு ஆஞ்சநேயருக்கு தினசரி வழக்கம்போல வழிபாடு நடைபெறும். அதற்கான முழு வேலைகள் நடந்து வருகின்றன என்கிறார் வாசுதேவன்.

1000 கோடி முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதிய புத்தகம் பிரதிஷ்டை :

இக்கோயில் அமையவுள்ள இடத்தில் தற்போது, 1000 கோடி முறை ஸ்ரீராமஜெயம் (ராம நாùüமத்தை ) எழுதிய புத்தகம் பூமி பூஜை செய்யப்பட்டு, பூமிக்குள் பிரதிஷ்டையும் செய்யப்பட்டுள்ளது என வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலேயே உயரமான சிலை :

இந்தியாவிலேயே அதிக உயரமாக ஆந்திரப்பிரதேசத்தில் பரிதாலாவில் 135 அடி உயரத்தில் அமைக்கப்பட்டதுதான் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒடிசா 108.9 அடி, தில்லி, சிம்லா 108, நந்துரா 105 என மொத்தம் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அதிக உயரங்களில் ஆஞ்சநேயர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் முதலாவது உயரமான சிலையாக இது அமையவுள்ளது என்கிறார் அவர்.

நன்கொடை மூலமே அறப்பணிகள் :
பக்தர்கள் அளித்து வரும் நன்கொடையை கொண்டு மட்டுமே இக்கோயில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. யாரிடமும் கட்டாயப்படுத்தி எந்த நிதி வசூலும் மேற்கொள்ளவில்லை. தாமாகவே வ்ந்த நிதியைக் கொண்டுதான் பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை, அனுமத் உபாசகர் இரா. வாசுதேவன், எண். 69-141, தெற்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம், திருச்சி-6 என்ற முகவரிக்கு நன்கொடைகளை அனுப்பலாம் .

தொடர்பு எண் :
94438 35726.

Leave A Reply

Your email address will not be published.