திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு இசைவேளாளர் இளைஞர் பேரவை மற்றும் இனைத்து இசை வேளாளர் சங்கங்கள் இணைந்து நடத்திய இசை வம்சத்தின் எழுச்சி விழா நிறுவன தலைவர் குகேஷ் தலைமையிலும், மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ்வரன் ஆர்.அதிபன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் உள் ஒதுக்கீடு என்பது இசைவேளாளர் சமுதாயத்தை பாதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும்.
திருக்கோயில்களில் மங்கள இசைக்கலைஞர்களை உடனடியாக பணிக்கு அமைத்த வேண்டும்.
கலைஞரின் திருக்குறள் விளக்க உரையினை அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்கத்தின் போது ஒலிக்க செய்ய வேண்டும்.
கோயில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களை அரசு ஊழியர்களாக கருதி உரிய ஊதியம் நிர்ணயம் செய்வதோடு, தனி நலவாரியம் அமைத்திடல் வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இசைப்பள்ளி உருவாக்கிடல் வேண்டும்.
கலைமாமணி விருதுகள் தகுதி அடிப்படையில் இடைத்தரகர்கள் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து நிறுவன தலைவர் குகேஷ் அளித்த பேட்டியில்,
108 சாதி சம்பந்தப்பட்ட 20 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசியல் காரணங்களுக்காக 10 சதவீதம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, யாரிடமும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்து அநீதியை இழைத்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தொடுப்போம். தமிழகம் முழுவதும் இசை வேளாளர் சமுதாயத்தினர் 18 லட்சம் பேர் உள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வள்ளலார் தமிழ் மன்ற தலைவர் ஜெய.ராஜமூர்த்தி, திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தலைவர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கே.நித்யானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.