தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சம்சுலுகா தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் முகமது, பொருளாளர் அப்துல் ரஹீம், துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்குப் பின்னர் மாநில பொதுச்செயலாளர் முகமது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திலிருந்து பல கோரிக்கைகள் பிரதமர் மோடிக்கு முன்வைக்கப்பட்டது. ஆனால் அப்போதெல்லாம் அதை நிறைவேற்றாமல் தற்போது அரசியல் காரணங்களுக்காக தமிழகம் வந்து சென்னையில் பல திட்டங்கள் நிறைவேற்றுவதாக அடிக்கல் நாட்டு விழாவில் மோடி கலந்து கொண்டு நாடகம் ஆடுகிறார்.
இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் தான் காரணம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், ஜிஎஸ்டி பங்களிப்பை வழங்க வேண்டும் என்பன போன்ற தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி தற்போது வரை செவிசாய்க்கவில்லை.
தமிழகத்தில் புயல் மழையால் பாதித்த போது பல இழப்புகள் ஏற்பட்டது. அப்போதெல்லாம் நேரில் ஆறுதல் கூற வரவில்லை. தேசிய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற பிரச்சினைகளை மத்திய பாஜக அரசு உருவாக்கியது.
கொரோனா காரணமாகச் சட்டங்களை அமல்படுத்தாமல் மத்திய அரசு அடக்கி வாசித்தது, தற்போது தடுப்பூசி செலுத்திய பின்னர் தேசிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போராட்டம் நடத்தும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது பாராட்டுக்குரியது. எனினும் அவர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வெளியில் வந்து பாஜகவின் ஊது குழலாக செயல்படுவார்.
அவரை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து நபிகள் நாயகம் குறித்து தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை முறியடிக்கும் வகையில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறைகள், போதனைகள் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறும் பணி நடைபெறும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது. ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூழ்நிலையை அறிந்து செயல்படுவோம்.
மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவாக இருந்துள்ளது. பாஜகவை விட அதிமுக முழு பாஜக.வாக மாறியுள்ளது என்றார்.