நாடு முழுவதும் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறையை சேர்ந்த முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் எஸ்.சிவராசு நேற்று தடுப்பூசி போட்டு கொண்டார். அப்போது டீன் வனிதா மற்றும் டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.
பின்ன மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது:-
முதற்கட்டமாக மருத்துவத்துறையை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தக்கட்டமாக வருவாய்த்துறை, காவல்துறையை சேர்ந்த முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நானும், தடுப்பூசி போட்டு கொண்டேன். என்னை போல் தாசில்தார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக வருவாய்த்துறையை சேர்ந்த 1, 362 பேர் தடுப்பூசி போட பதிவுசெய்துள்ளனர். மருத்துவ மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று (நேற்று) தடுப்பூசி போட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 4, 342 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம்.
மொத்தம் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. ஒருவாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருச்சி மாவட்டத்துக்கு போதுமான தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசி போட்ட யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்