திருச்சியில் ரைபிள் கிளப் சார்பில் துப்பாக்கி சுடும் போட்டி.
திருச்சி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ரைபிள் கிளப் வளாகத்தில் நடைபெற்றது.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 38 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
15 வயதுக்கு உட்பட்டோர், 15 முதல் 18 வயது, 18 முதல் 21 வயது, 21 வயதிற்கு மேல்மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்ற வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. ஓப்பன் சைட், பீப் சைட், ஏர் பிஸ்டல் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ஏர் சைட் ஓப்பன் சைட் (ஆண்கள்) பிரிவில் மணிகண்டன் முதல் பரிசும், குரியன் 2-வதுபரிசும், டேனியல் ஜூட் மார்ட்டீன் 3-வது பரிசும் பெற்றனர். ஜூனியர் பிரிவிலும், யூத் பிரிவிலும் குரியன் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். பெண்களுக்கான போட்டியில் ரிஷா ஹன்சிகா ஒரு போட்டியில் முதலிடத்தையும், மற்றொரு போட்டியில் 2-வது இடத்தையும் பெற்றார்.
மாநில போட்டிக்கு…
ஆண்களுக்கான ஏர்ரைபிள் பிரிவில் தினேஷ் முதலிடத்தையும், முகமது அப்துல்லா 2-வது இடத்தையும், கெல்வின் ஆல்பிரட் 3-வது இடத்தையும் பிடித்தனர். பீப்சைட் ஏர்ரைபிள் வகை போட்டியில் ஆர்.தினேஷ் ஒரு பிரிவில் முதல் இடத்தையும், மற்றொரு பிரிவில் 2-வது இடத்தையும் பிடித்தார். ஒவ்வொரு பிரிவிலும் 60 மதிப்பெண் பெற்றவர்கள் இந்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்று ரைபிள் கிளப் செயலாளர் அசோக் கூறினார்.