பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான ரத்தினசபாபதி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
தமிழகத்தில் சமூக நீதி என்ற கொள்கை சமநிலை என்ற நிலைப்பாட்டிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு முதல் விலகிவிட்டது. அரசியல் காரணங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும், அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டது. 1950 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்காக போராடியவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தனர். பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சரத்துக்களை அரசியல் சாசனத்தில் வழி வகை செய்தனர். நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் அடித்தட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் இத்தகைய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
கல்வி, சமூக அந்தஸ்து, அரசு பதவிகளில் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.
1990ஆம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருந்தது. அதன் பின்னர் 20 சதவீத ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்டுவிட்டது. இட ஒதுக்கீட்டை பின்தங்கியவர்களை கண்டறிந்து கொடுக்கவேண்டும். அரசியல் காரணங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காக இட ஒதுக்கீட்டை கொடுக்கக் கூடாது. இதனால் மற்ற சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர், அதாவது 1.15 கோடி பேர் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இத்தகைய மாற்றங்கள் காரணமாக பிற்படுத்தப்பட்ட மக்களும் உயர்வகுப்பு பிரிவு மக்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் போராட்டம் நடத்தினார். இதையடுத்து முதலமைச்சர் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவரது சமுதாயத்தை சேர்ந்தவரின் தலைமையிலேயே ஆணையத்தை அமைத்து உள்ளார்.
ஆனால் 137 சமூகத்திற்காக எந்த தலைவரும் குரல் கொடுக்கவில்லை. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமையை மீட்பதற்காக இந்த கூட்டமைப்பு கடந்த மாதம் கோவையில் உதயமானது. வலிமையை நிரூபிப்பார்கலை திருப்திப்படுத்த நினைக்கக்கூடாது. 1990ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் நியாயமாக வழங்க வேண்டும். கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளது போல் இட ஒதுக்கீடு தொகுப்பு வாரியாக வழங்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இணைத்து இதர பிற்படுத்தப்பட்டோர் என்று மத்திய அரசில் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 180 சமூகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஓபிசி பிரிவில் வருமான வரம்பு உச்ச நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இட ஒதுக்கீடு பல வகையில் பாதிக்கப்படுகிறது. இத்தகைய மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து யாரும் குரல் கொடுப்பதில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 31 ஆம் தேதி திருச்சியில் 18 சமூக சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம்
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.
இந்த கூட்டத்தில் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மணிவேல், சிவசண்முகம், சிவானந்தம், ஸ்ரீதர், முத்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.