இந்திய அணியில் திடீரென சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய பிட்னஸ் டெஸ்ட் காரணமாக ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்ய வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார்கள்.
இந்திய அணியில் விளையாட யோ யோ டெஸ்ட் என்ற தேர்வு முறை வைக்கப்படுகிறது. இந்திய கிரிகெட் வாரியம் இந்த டெஸ்ட் முறை மூலமாகவே தற்போது வரை இந்திய வீரர்களை தேர்வு செய்கிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் இதே டெஸ்ட் முறையை கொஞ்சம் மாற்றி பயன்படுத்தி வருகிறது. இந்திய வீரர்கள் பிட்டாக இருக்க இந்த டெஸ்டிங் முறை முக்கிய காரணம் ஆகும்.
யோ யோ டெஸ்ட் என்பது மிகவும் கடினம். 20 மீட்டர் இடைவெளியில் உள்ள ஓடுபாதையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் , கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக ஓடவேண்டும். ஒவ்வொரு பீப் சத்தம் கேட்கும் போதும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கடைசி சுற்று வரை வேகத்தை அதிகரித்து அதிகரித்து நிற்காமல் ஓட வேண்டும்.
இதில் வெற்றி பெற்று பிட்னஸை நிரூபிப்பது மிகவும் கடினம். இதில் வெற்றிபெற குறைந்தது 17.1 புள்ளிகள் பெற வேண்டும். இந்த நிலையில் இந்திய அணியில் வீரர்களை பிட்டாக தேர்வு செய்ய கூடுதலாக இன்னொரு டெஸ்ட் முறை சேர்க்கப்பட்டு உள்ளது.
அதன்படி 2 கிலோ மீட்டர் தூரத்தை வீரர்கள் எவ்வளவு வேகமாக ஓடி கடக்கிறார்கள் என்று சோதனை செய்யப்படும்.
இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் 2 கிமீ தூரத்தை 8.15 நிமிடத்தில் கடக்க வேண்டும்.
மற்ற பேட்ஸ்மேன்கள், கீப்பர்கள், ஸ்பின் பவுலர்கள் 8.30 நிமிடத்தில் இந்த தூரத்தை கடக்க வேண்டும். இதுதான் புதிய டெஸ்ட் முறையாகும்.
யோ யோ டெஸ்டில் குறைந்த மதிப்பெண் வைத்து இருக்கும் ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் போன்றவர்கள் இந்த டெஸ்டில் தோல்வி அடைய அதிக வாய்ப்புள்ளது. அதிக எடையால் இவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் இந்த டெஸ்டில் பாஸ் செய்வது கஷ்டம் என்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் வாரியம் பிட்டாக இல்லாத வீரர்களுக்கு செக் வைப்பதற்காகவே இந்த புதிய தேர்வு முறையை கொண்டு வந்துள்ளது என கூறப்படுகிறது.