சலூன் கடைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம், முடித்திருக்கும் தொழிலாளர் நல சங்கத்தின் திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் நகர நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில் இளைஞரணி செயலாளர் மாரிமுத்து, துணைத்தலைவர் ரஞ்சித், அமைப்பாளர்கள் ஜீவரத்தினம், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலிவடைந்த நிலையில் இருப்பதால் முடிதிருத்தும் நிலையங்களுக்கு மாநகராட்சி உரிமம் (லைசன்ஸ் ) வாங்க வேண்டும் என்ற முறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மருத்துவர் சமூக மக்களுக்கு கல்வியில், வேலை வாய்ப்பில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவ சமூக பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஆலோசகர் சுரேஷ் வரவேற்றார். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.