முதல்வர் தனது சொந்த ஊரில் பொது மக்களுடன் பொங்கல் கொண்டாட்டம்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆண்டு தோறும் தை மாதம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டும் சிலுவம்பாளையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் .
அதற்காக நேற்று காலை விமானத்தில் அவர் சென்னையிலிருந்து சேலத்திற்கு சென்றார்.
பின்னர் சொந்த ஊரான சிலுவம்பாளையதிற்கு காரில் சென்று அங்கு காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோவில் திடலில் நடந்த பொங்கல் விழாவில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துகொண்டு விழாவை உற்சாகமாக கொண்டாடினார்.
அப்போது முருகன் கோவிலில் சிறப்பு வழிபாட்டை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற அனைத்து பொதுமக்களுக்கும் சர்க்கரைப் பொங்கல், கரும்பு, மஞ்சள் குலைகள் போன்ற பொருட்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து தனது பண்ணை தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு பழம், வெல்லம், கரும்பு, தேங்காய் ஆகிய உணவு பொருட்களை கொடுத்தார்.பின்னர் பொங்கல் பண்டிகையையொட்டி அப்பகுதியில் நடந்த கிராமிய இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த முதல்வர் அங்கு கூடியிருந்த கிராம மக்களுடன் பேசி மகிழ்ந்தார்.
இதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.