தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வரும் 2021 ஜனவரி 4ஆம் தேதி முதல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2 கோடியே 10 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிச்சாமி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்காக டோக்கன்கள் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று முதல் துவங்கி, வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 1224 நியாயவிலைக்கடைகள் மூலம் 8,14,833 குடும்ப அட்டைகளில், 7,95,000 அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கும் பணி இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சி கிழக்கு, மேற்கு தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டோக்கன் வழங்கும் பணியினை மேற்கு தாலுக்கா தாசில்தார் சண்முகராஜன் தலைமையில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த டோக்கன்களில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 உள்ளிட்டவற்றை பயணாளிகளுக்கு வழங்கும் தேதி மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக காலை 9 மணி முதல் 6 மணிவரை வழங்க திட்டமிடப்பட்டு, டோக்கன் எண்ணிற்கு உரியவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 100 பேர் என வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளை தொடர்ந்து, வருகிற ஜனவரி 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 வழங்கும் பணி துவங்க உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சை அரிசி – 1 கிலோ, சர்க்கரை- 1 கிலோ, முந்திரி – 20 கிராம், ஏலக்காய் – 5 கிராம், உலர்திராட்சை – 20 கிராம் முழு கரும்பு ஒன்று, ரூ. 2500 ரொக்க பணம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
கொரோனா காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, ஜனவரி 4- ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் அரிசி அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.
பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்கள் 13ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகையுடன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.