திருமணமான 5 மாதங்களில் பெண் சாவு,
கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவு
திருச்சியில், திருமணமான 5 மாதங்களில் பெண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோட்டாட்சியர் தனி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் ஷாலினி (வயது 20). இவருக்கு சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் கடந்த ஜூலை 24 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பின்னர் அனைத்து சம்பிர்தாயங்களும் முடிந்த நிலையில், ஷாலினி சேலத்திலேயே கணவர் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி, தனது சகோதரியின் பிறந்தநாளை ஒட்டி, திருச்சி வந்தார். பின்னர் பெற்றோருடனேயே தங்கினார். டிச. 15 ஆம் தேதி அவருக்கு கடுமையான வயிற்று வலியும் பின்னர், காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மறுநாள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் 17ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஷாலினி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, அவரது தந்தை செல்வராஜ் திருச்சி, கோட்டை மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். அதில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருமணமான 5 மாதங்களிலேயே மணப்பெண் இறந்துள்ளதால், வரதட்சனை அல்லது வன்கொடுமை காரணமாக அவர் இறந்தாரா என்ற கோணத்தில் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.