டிச.15 முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கு அனுமதி. டாஸ்மாக் சங்க தலைவர் தகவல்.
டிச.15 முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கு அனுமதி. டாஸ்மாக் சங்க தலைவர் தகவல்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபார்கள் கடந்த 8 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன.
(ஓட்டல்களில் உள்ள ஏசி பார்கள் மற்றும் திருச்சியில் ஒரு சில இடங்களில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் பார்கள் செயல்படுகிறது என்பது வேறு)
இதன் காரணமாக பார் உரிமையாளர்கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். பார் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த முடியாமலும் தவித்து வருகிறார்கள். இந்த வாடகை பாக்கி மட்டுமே ரூ.405 கோடிக்கு உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
மூடியிருந்த ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள், கல்லூரிகள் போன்று அனைத்தும் செயல்படும் நிலையில் டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று பார் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் டாஸ்மாக் பார்களை மட்டும் தொடர்ந்து மூடி வைத்திருப்பது தங்களுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.
இதுதொடர்பாக பார் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த நிர்வாகிகள், மதுபார்களை திறப்பதற்கு உடனடியாக அனுமதிக்காவிட்டால், பார் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன், டாஸ்மாக் பார் உரிமையாளர்களை போனில் அழைத்து பேசினார். வருகிற 15-ந் தேதிக்குள் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக டாஸ்மாக் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, ‘‘கொரோனா காலத்தில் 9 மாதமாக பார் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த முடியாமல் உள்ளோம். அதற்கான மொத்த வாடகையையும் நாங்களே செலுத்த வேண்டி உள்ளது’’ என்றார். பார் கட்டிட மாத வாடகையாக ரூ.50 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 15-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 3,250 டாஸ்மாக் பார்களையும் திறப்பதற்கு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.