திருச்சியில் திமுக சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் திருச்சியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏக்கள் செளந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பெரியசாமி, பரணிகுமார், இலக்கிய அணி மாநில துணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மாத்தூர் கருப்பையா, பகுதி செயலாளர்கள் ராம்குமார், கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் பேசுகையில்…. தமிழக முதல்வருக்கு வேளாண் சட்டம் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று குற்றம் சாட்டினார்.
வைரமணி பேசும் போது…… 2021ல் திமுக அரசு அமைப்பது உறுதி என்று அவர் பேசினார். காடுவெட்டி தியாகராஜன் பேசும்போது….மக்களை தில்லாக சந்திக்க கூடிய ஒரே கட்சி திமுக. அதிமுகவினர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சந்திக்கின்றனர். ஆட்சியைப் பிடிக்க அதிமுக பணத்தை எண்ணிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் மக்களோ மனதை எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர் பேசினார்.
அவரைத் தொடர்ந்து எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி பேசும்போது…. கொரோனா காலகட்டத்தில் தன்னை பற்றி கவலைப்படாமல் பணியாற்றியவர்கள் திமுகவினர். ஆனால் இங்குள்ள அமைச்சரோ மாங்காய் கொடுத்துக் கொண்டிருந்தார்.
விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே கட்சி திமுகதான் என்று அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. திமுகவினர் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.