ரெயில்வே கேட் மூடக்கூடாது என பொதுமக்கள் போராட்டம்.
ரெயில்வே கேட் மூடக்கூடாது என பொதுமக்கள் போராட்டம்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் மில் கேட் எனப்படும் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் ரயில்வே கேட்டு்ன் பாதை உள்ளது. இந்த பாதையானது அங்குள்ள சர்க்கரை ஆலைக்காக, ஒப்பந்தம் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஒப்பந்த காலம் முடிவடைவதால் இன்று முதல் இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். கோட்டையார் தோட்டம், 4 ரோடு, திருச்சாப்பூர், சங்கமடை, பங்களாபுதூர், காசாகாலனி, இனுங்கூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ரயில்வே கேட் வழியாகதான் சென்று வருவார்கள். இந்த பகுதிக்கு பேருந்து போக்குவரத்தும் இந்த பாதை வழியாகதான் நடக்கிறது.
இந்த கேட் மூடப்பட்டால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவார்கள். எனவே இந்த ரயில்வே கேட்டை மூடாமல், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்து திறந்திட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு முன்பாக லாலாபேட்டையில் ரயில்வே கேட் மூடப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு கடிதங்கள், போராட்டங்கள் நடத்தியும் திரும்ப திறக்க முடியவில்லை. அந்த நிலை இங்கு வந்து விடகூடாது
என்பதற்காக இன்று காலை பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.