நடிகர் தவசி இறைவனடி சேர்ந்தார். திரையுலகத்தினர் கண்ணீர்
நடிகர் தவசி இறைவனடி சேர்ந்தார். திரையுலகத்தினர் கண்ணீர்
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம்.
கட்டுமஸ்தான தேகம், கணீர் குரல் என பல ரசிகர்களையும் கவர்ந்திழுத்த தவசி, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மொட்டை தலை, எலும்பும் தோலுமான தேகம் என பார்க்கவே பரிதாபமாக இருந்த தவசியை பார்த்து இவரா அவர் என ரசிகர்கள் கண்கலங்கினர்.
அதுமட்டுமின்றி சிகிச்சை பணமின்றி தவித்த தவசி, மருத்துவ உதவி கோரினார்.
இதையடுத்து அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, ரஜினிகாந்த், சிம்பு, விஜய் சேதுபதி, ரோபா சங்கர் உள்ளிட்ட பலரும் நிதி உதவி வழங்கினர்.
உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலமாக அவருக்கு இலவச சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சிலநாட்கள் முன் நான் நிச்சயம் பழைய மாதிரி மீண்டு வந்துவிடுவேன் என நம்பிக்கையுடன் தவசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி நடிகர் தவசி மரணமடைந்தார்.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் பலரும் மிகுந்த வருத்தத்துடன் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.