Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று தேசிய வலிப்பு நோய் தினம்….

இன்று தேசிய வலிப்பு நோய் தினம்....

0

நவம்பர் 17
தேசிய வலிப்பு நோய் தினம்
(National Epilepsy Day)

நவம்பர் 17-ஆம் நாள் தேசிய வலிப்பு நோய் தினம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கும் விதமாக இந்தியாவில் தேசிய வலிப்பு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மூளை செல்கள் மற்றும் மூளை நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்புகளின் விளைவாகவே வலிப்பு நோய் உண்டாகிறது. இது அனைத்து வயதினருக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 5 கோடி பேருக்கு வலிப்புநோய் உள்ளது. இவர்களில் 80 சதவிகிதம் பேர் வளர்ந்து வரும் நாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். வலிப்பு நோய்க்கு சிகிச்சை உண்டு என்றாலும் வளர்ந்து வரும் நாடுகளில் 4-ல் 3 சதவிகிதம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான சிகிச்சை சரியாக கிடைப்பதில்லை. இந்தியாவில் ஒரு கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம்.

திடீரென காலும் கையும் கட்டுப்படுத்த முடியாமல் வெட்டி இழுத்தல், நினைவு இழத்தல், கை மற்றும் காலில் குத்தும் உணர்வு, கை, கால், முகத்தில் தசை இறுக்கம் போன்றவை வலிப்பு நோயின் அறிகுறிகளாக உள்ளது.

மரபுக் கோளாறுகள், மூளைத் தொற்று, பக்கவாதம் மற்றும் மூளைக்கட்டி, தலையில் காயம் அல்லது விபத்து, குழந்தைப் பருவத்தில் நீடித்த காய்ச்சல் போன்றவை வலிப்பு ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளது.

வலிப்பைக் கண்டு பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம்.வலிப்பு வரும்போது அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கக் கூடாது.
வலிப்பு வந்தவருக்கு அருகில் இருக்கக்கூடிய கூர்மையான, ஆபத்து ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற வேண்டும்.
கழுத்தில் இறுக்கமாக இருக்கும் ஆடையைத் தளர்த்த வேண்டும்.
வாயில் இருக்கும் திரவம் பாதுகாப்பாக வெளியேற நோயாளியை ஒரு பக்கமாக மெதுவாகப் புரட்ட வேண்டும்.
தலைக்கு அடியில் மென்மையான துணி, தலையணை போன்ற ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.
நாக்கைக் கடித்துவிடக் கூடாது என்று நினைத்து வாயில் எதையும் வைக்கக்கூடாது.
மருத்துவ உதவி கிடைக்கும்வரை யாராவது உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு வந்தவருக்கு ஏற்பட்ட உடல் மாற்றங்களைக் கவனித்து மருத்துவரிடம் தெரிவித்தால், அவருக்கு சரியான சிகிச்சையளிக்க அது உதவியாக இருக்கும்.
வலிப்பு வந்தவரை ஓய்வெடுக்க அல்லது தூங்க விட வேண்டும்.
வலிப்பு நோய்க்கு மருந்துகளைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். அதற்கு சிகிச்சையைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதே முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.வலிப்பு என்று கண்டறிந்தவுடன் சிகிச்சையைத் தொடங்குவதன் மூலம் நிலை மேலும் மோசமாவதைத் தடுக்கலாம்.

மருத்துவரிடம் ஆலோசிக்காமல் மருந்தை நிறுத்தக்கூடாது. வேறு மருந்தை உட்கொள்ளும் முன்னர், பக்க விளைவுகளைத் தவிர்க்க உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. வலிப்பு நோயைத் தூண்டும் என்பதால் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.வரலாற்றில் நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் தினம் குறித்து திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் எடுத்துரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.