கமல், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். போலீசார் விசாரணை.
கமல், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல். போலீசார் விசாரணை.
*கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்*
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீட்டுக்கும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் கமல்ஹாசன் மற்றும் சரத்குமார் வீடுகளுக்கு சென்று மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படததால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்று தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? அவர் எங்கே இருந்து தொலைபேசியில் பேசினார் என்று போலிசார் ஆய்வு செய்ததில், அந்த நபர் மரக்காணத்தில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை போலீசார் மரக்காணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த நபர் யார் என்று மரக்காணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக நடிகர்கள், அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது என்பது நடந்துவருகிறது. அண்மையில், நடிகர் சூரியாவின் அலுவலகத்துக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கும் நடிகர் தனுஷ் வீட்டுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.