ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி, எஸ்.ஏ.சி
ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி, எஸ்.ஏ.சி
விஜய் ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி – எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் பெயரில் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய் என் தந்தை ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ரசிகர்களுக்கு ஒரு அங்கீகராம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதை செய்துள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து, நடிகர் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் “இன்று என் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்து உள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன் அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிரடியாக அறிக்கை வெளியிட்டார். மேலும், எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை தெரிவித்தும் உள்ளார்.
இந்த நிலையில், தமிழ் தொலைக்காட்சி ஊடகத்துக்கு தொலைபேசி மூலம் விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “விஜய் பெயரில் முதலில் நாந்தான் ரசிகர் மன்றம் தொடங்கினேன். எனக்கு அந்த நடிகரைப் பிடித்திருந்தது அதனால் ரசிகர் மன்றம் தொடங்கினேன். 1993ம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம் தொடங்கினேன். அப்போது நான் அவரைக் கேட்க வில்லை. அந்த நடிகரை எனக்கு பிடித்திருந்தது. அதனால், ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தேன். ஐந்து வருடம் கழித்து ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றினேன். அப்புறம் மக்கள் இயக்கமாக மாற்றினேன். பிடிச்ச ஒரு நடிகனோ அல்லது புகழ் பெற்றவரோ இருக்கிறார் என்றால் அவர்கள் பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து நல்லது செய்தேன். ஒரு தந்தையாக இருந்துகூட நான் இதை செய்யவில்லை. பிடித்த ஒரு நடிகன் பெயரில் நல்லது பண்ணனும் மக்களுக்கு என்று நினைத்தேன். நான் வருகிற தேர்தலைப் பற்றிகூட யோசனையை செய்யவில்லை. 25 வருடமாக நான் இந்த மக்கள் இயக்கம் என்ற பெயரில் மக்களுக்கு பல நல்ல பணிகளை செய்திருக்கிறேன் ரசிகர்களுடன் சேர்ந்து. ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்திருக்கிறேன். வேறொன்றுமில்லை. அரசியல் பற்றி நான் எதுவுமே பேசுவதில்லை.” என்று கூறினார்.
இதன் மூலம், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயின் பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்குவதில் விருப்பம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.