*திருச்சி கடைவீதி பகுதிகளில் நோ மாஸ்க்- நோ என்ட்ரி -திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு*
*திருச்சி கடைவீதி பகுதிகளில் நோ மாஸ்க்- நோ என்ட்ரி -திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு*
முக கவசம் அணியாதவர்களுக்கு
ரூபாய் 200 அபராதம் திருச்சியில் கமிஷனர்
பேட்டி.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் – தீபாவளி பண்டிகையை பாதுகாப்பிற்காக திருச்சியில் தற்காலிக காவல் உதவி மையத்தை திறந்து வைத்து, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேட்டி
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.
இதனால், பொது மக்களுடைய வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சற்று பணப்புழக்கம் அதிகரித்து இருக்கிறது.
வருகிற மாதங்களில் பண்டிகைகளை கொண்டாட பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகை காரணமாக, திருச்சி என்.எஸ்.பி ரோடு, பெரியகடைவீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், தங்க நகை கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையகங்கள் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கில் உள்ளன.
இவற்றில் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மலைக்கோட்டை சாலையில் மக்கள் கூட்டம் காரணமாக தலைகள் மட்டுமே தென்படுகிறது.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடக்கக்கூடும் என்பதால், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான கோட்டை காவல் நிலையம், மலைக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பிற்காக 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சத்திரம் பேருந்துநிலையம் முதல் மலைக்கோட்டை வரை பல்வேறு பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இரண்டு இடங்களில் CCTV கேமரா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க, சாதாரண உடையில் 100 குற்றப்பிரிவு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த 2 துணை ஆணையர்கள் தலைமையில் 700 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
முக கவசம் அணியாத விற்பனையாளர்கள், பொதுமக்களுக்கு முகக் கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மேலும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முக கவசம் அணியாதவர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் தெரிவித்தார்.