Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று இரும்புப் பெண் இந்திராவின் நினைவு நாள்.

இன்று இரும்புப் பெண் இந்திராவின் நினைவு நாள்.

0

அக்டோபர் 31
இந்தியாவின் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி நினைவு நாள்.

இந்தியாவின் அலகாபாத் நகரில், நேரு, கமலா தம்பதியருக்கு இந்திராகாந்தி மகளாக 1917 நவம்பர் 19-ந் தேதி பிறந்தார். பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு முடித்து இளம் வயதிலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறை சென்றவர்.

விடுதலை போராட்டத்தில் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, சிறுமி இந்திராவுக்கு இந்தியாவின் பன்முகத் தன்மையையும், உலக வரலாற்றையும் கடிதங்கள் மூலமாக போதித்தார். இதன்மூலம் இந்திராவை இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராக விளங்குவதற்கு அடித்தளம் அமைத்தவர் நேரு.

இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்த 17 ஆண்டுகாலம் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் இந்திரா காந்தி. அவர் வெளிநாடு செல்கிறபோதெல்லாம் உடன் சென்றவர். இதன்மூலம் உலகத் தலைவர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார். ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.

ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பிறகு அவரது விருப்பப்படி இந்தியாவின் பிரதமராக பெருந்தலைவர் காமராஜரின் பரிந்துரையின் பேரில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் குறுகிய காலத்தில் மரணம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக எவரை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. அப்பொழுது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், இந்தியாவை வழிநடத்தக்கூடிய ஆற்றலும், திறமையும் இந்திரா காந்திக்கு இருப்பதை உணர்ந்தார். அதையொட்டி அவரை பிரதமராக்க பலரது ஆதரவுடன் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. இதையொட்டி இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 11 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்தார்.

இந்திய அரசியலை ஏறத்தாழ 20 ஆண்டுகாலம் தமது ஆளுமைக்குள் வைத்திருந்தவர் இந்திரா காந்தி. இந்திய மக்கள் அவரை நேசித்தார்கள், மதித்தார்கள். அன்பு காட்டி, ஆதரவு தெரிவித்தார்கள்.

இந்திரா காந்தியின் 15 ஆண்டுகால ஆட்சியில் வறுமையை எதிர்த்தார்.
வங்கிகள் தனியார் நலனுக்காக செயல்பட்ட போது அவற்றை தேசியமயமாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டார். ஜனநாயக நாட்டில் மக்கள் வறுமையில் இருக்கும் போது, மன்னர்களுக்கு மானியமா? என்ற கேள்விக்கு விடை கண்டு, அவற்றை ஒழித்தார். நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினார். வேளாண்மையில் உற்பத்தியை பெருக்குவதற்கு பசுமைப் புரட்சி செய்தவர். சிக்கிம் பகுதியை இந்தியாவோடு இணைத்தவர்.

வங்க தேசத்திற்கு படை நடத்தி, அந்த நாட்டிற்கு விடுதலையை பெற்றுத் தந்தவர். உலக வல்லரசுகள் வியக்கும் வகையில் அணு ஆயுத சோதனையை நடத்தியவர். அதன்மூலம் இந்தியாவை அணுஆயுத பலம் வாய்ந்த நாடாக உலகிற்கு பிரகடனம் செய்தவர். இந்திய-ரஷிய நட்புறவை வளர்த்து, வெளியுறவுக் கொள்கையில் புதிய பாதையை வகுத்தவர். அணி சேரா நாடுகளின் ஒற்றுமையை வலிமைப்படுத்தியவர். அண்டை நாடான பாகிஸ்தானுடன் சிம்லா ஒப்பந்தம் செய்து நட்புறவை வளர்த்தார்.

1967, 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று பொதுத் தேர்தல்களிலும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வெற்றியை பெற்று தந்தவர். குறிப்பாக, நெருக்கடி நிலைக்கு பிறகு 1977 தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு, பிரதமர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகால ஜனதா ஆட்சியின் அவலங்களால் மீண்டும் 1980-ல் மக்கள் பேராதரவோடு பிரதமராக தேர்வு பெற்றவர் இந்திரா.

புதிய அதிகாரத்துடனும், பெரும்பான்மையோடும் பதவிக்கு வந்த போதும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. பஞ்சாபில் சீக்கியர்கள் தனியாக காளிஸ்தான் கோரி கிளர்ச்சி தொடங்கினார்கள். தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பெரிய சவாலாக அந்த இயக்கம் வளர்ந்தது.

1984-ம் ஆண்டில் பொற்கோவிலில் ஆயுதங்களை குவித்துக்கொண்டு பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை ஆபரேஷன் புளு ஸ்டார் என்ற நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் வெளியேற்றியது. நாட்டு நலன் கருதி இந்த முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டிய நிலை பிரதமர் இந்திராவுக்கு ஏற்பட்டது. இந்தியாவின் ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு ஆளான போது அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமான நிலை உருவானது. இந்த நடவடிக்கையினால் பலர் கொல்லப்பட்டனர். பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியது குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்தன. இதையொட்டி பிரதமர் இந்திரா மீது சீக்கியர்கள் மத்தியில் கசப்புணர்வு வளர்க்கப்பட்டது.

இந்திரா காந்தியின் கடைசிகாலம் என்பது மிகுந்த சவால்களை கொண்டதாக இருந்தது. பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய நடவடிக்கைக்கு பிறகு தமது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற சூழல் உருவாகியிருந்தது. அதை எதிர்கொள்ள அவர் தயாராகவே இருந்தார். ஆனால் வகுப்புவாத சக்திகளுடன் எந்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள அவர் விரும்பியதில்லை.

1984 அக்டோபர் 31-ந் தேதி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதற்காக பிரதமர் இந்திரா தமது வீட்டு தோட்டத்திற்கு வந்தபோது அவரது காவலர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்றவர்கள் அவரது பாதுகாவலர்களே என்பதும், அவர்கள் சீக்கிய இனத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மிகுந்த அதிர்ச்சி தரத்தக்க செய்தியாகும்.

பிரதமர் இந்திரா மரணமடைவதற்கு முதல் நாள் மாலை ஒடிசா மாநிலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அதில், “இன்று நான் இங்கு இருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது. என்னை சுட்டுக்கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்த காலத்தை நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்று தான் எனக்கு பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும், பலப்படுத்தும்” என்று குறிப்பிட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்த உரையின் மூலம் தமது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தார். அதனால் தான் இத்தகைய உரையை அவரால் நிகழ்த்த முடிந்தது. துணிச்சல் மிக்க இந்திரா காந்தி பயங்கரவாத சக்திகளால் வீழ்த்தப்பட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கி 50 பைசா மதிப்பில் இந்திராகாந்தி உருவம் பொறித்த நினைவாக நாணயத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது இந்திய அஞ்சல் துறையினர் இந்திராகாந்தி உருவம் பொறித்த அஞ்சல் தலையும் சிறப்பு உறையையும் வெளியிட்டுள்ளது
என்பதை திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை, நாணயவியல் சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.