திருச்சி சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம். கலெக்டர் அறிவிப்பு
திருச்சி சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம். கலெக்டர் அறிவிப்பு
சொட்டுநீர் பாசனம் செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் கலெக்டர் தகவல்
சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன அமைப்புகளை உருவாக்குவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அளித்து வருகிறது. பாசன நீர்வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி விவசாயிகள் நுண்ணீர் பாசனமுறையில் சாகுபடி மேற்கொள்வதற்கு துணை நிலை நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மானியம் மட்டுமல்லாது குழாய் கிணறு, துளைக்கிணறு அமைக்கவும், நீர் இறைப்பதற்கு ஆயில் என்ஜின் மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும் பாசன நீரினை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவவும் மற்றும் தரைநிலை நீர்த்தேக்கதொட்டி அமைத்தல் போன்ற துணை நிலைநீர் மேலாண்மை பணிகளுக்காகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
எந்தெந்த வகையில் கிடைக்கும்
திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள பாதுகாப்பான குறு வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள அன்பில், கல்லக்குடி, லால்குடி, புள்ளம்பாடி, வாளாடி, வளநாடு, சிறுகாம்பூர், ஆமூர், அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை, ஸ்ரீரங்கம், நவல்பட்டு, திருவெறும்பூர், வேங்கூர், திருச்சி (வடக்கு), திருச்சி (தெற்கு) ஆகிய குறு வட்டாரங்களில் குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
டீசல் பம்பு செட், மின் மோட்டார் பம்பு செட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதத் தொகை ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் குழாய் அமைப்பதற்கு 50 சதவீதத் தொகை எக்டருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு அதற்காகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ.350-க்கு மிகாமலும் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.