Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பருப்பு கொள்முதல் செய்து 72 லட்சம் மோசடி. 4 பேர் மீது வழக்கு

திருச்சியில் பருப்பு கொள்முதல் செய்து 72 லட்சம் மோசடி. 4 பேர் மீது வழக்கு

0

 

திருச்சியில் மொத்த வியாபாரிகளிடம் பருப்பு கொள்முதல் செய்து ரூ.72½ லட்சம் மோசடி செய்ததாக மளிகைக்கடை பங்குதாரர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்தவர்கள் வைரவேல், ஸ்ரீதர், ஜோதி மற்றும் ராஜன்பாபு. இவர்கள் கூட்டாக இணைந்து ‘விஜயலட்சுமி மளிகை ஷாப்‘ என்ற பெயரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள், தங்களது மளிகைக்கடைக்கு, திருச்சி பருப்பு உற்பத்தியாளர் சங்க தலைவரும், மார்க்கெட்டில் மொத்த மளிகை வியாபாரம் செய்யும் தங்கராஜ் மற்றும் எம்.பி.முருகேசன், சவுந்தர்பாண்டியன், ரமணி, ரவிச்சந்திரன் மற்றும் லதா ஆகிய 6 பேரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை (5 மாதங்களில்) பருப்பு கொள்முதல் செய்தனர்.

இந்த பருப்பானது, திருச்சி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரியான முருகேசன் மளிகைக்கடையில் வைத்து கொடுக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சத்து 94 ஆயிரத்து 550 ஆகும். 3 ஆண்டுகள் கடந்தும் பருப்பு கொள்முதல் செய்த வகையிலான தொகை யை வியாபாரிகளுக்கு, மளிகைக்கடையை கூட்டாக நடத்தும் 4 பேரும் திரும்ப கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

ரூ.72½ லட்சம்

3 ஆண்டுகளில் பருப்பு கொள்முதல் செய்த தொகையானது வட்டியுடன் சேர்த்து ரூ.72 லட்சத்து 57 ஆயிரத்து 344 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மொத்த வியாபாரிகள் எம்.பி.முருகேசன் தரப்பிற்கும், மளிகைக்கடைக்காரர்கள் 4 பேருக்கும் இடையே ஒரு சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த பேச்சுவார்த்தையில், மளிகைக்கடைக்காரர்கள் வைரவேலு, ராஜன்பாபு ஆகியோருக்கு சொந்தமான ராமநாதபுரத்தில் உள்ள 2.70 ஏக்கர் நிலத்தை பருப்பு கொள்முதல் செய்த வகையில், வட்டியுடன் கூடிய தொகைக்கு ஈடாக பாதுகாப்பு பத்திரம் மொத்த வியாபாரிகளுக்கு எழுதி கொடுக்கப்பட்டது. அந்த பத்திரத்தில் 3 மாதத்திற்குள் பருப்பு கொள்முதல் செய்த தொகையை முழுமையாக செலுத்தி விட்டு பத்திரத்தை மீட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மளிகைக்கடைபங்குதாரர்கள் மீது வழக்கு

ஆனால், மாதங்கள் பல கடந்தும் தொகையை திரும்ப செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்து விட்டதை அறிந்து மொத்த வியாபாரிகள் வேதனை அடைந்தனர். இது தொடர்பாக பருப்பு உற்பத்தியாளர் சங்க தலைவரான வியாபாரி தங்கராஜ், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் விசாரணை நடத்தி, பணம் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மளிகைக்கடை பங்குதாரர்கள் வைரவேல், ஸ்ரீதர், ஜோதி மற்றும் ராஜன்பாபு ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சேர்ந்து மோசடி செய்ததாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 406, 420 ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

Leave A Reply

Your email address will not be published.