தமிழகத்தில் அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் துணிக்கடைகள், நகைக்கடைகளில் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை சென்னை தியாகராய நகர் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் தியாகராய நகரில் உள்ள மூசா தெருவில் உத்தம் என்ற பெயரில் மொத்த வியாபார நகை கடை 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 21ஆம் தேதி கடையில் இருந்து ரூ.2 கோடி தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
சிசிடிவியில் சிவப்பு நிற முககவசம் மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர், மதில் சுவர் ஏறி குதித்து நகைகளை திருடி வரும் காட்சியும், பின்னர் கூட்டாளியுடன் பைக்கில் தப்பிச்செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளன.
இந்த வழக்கில், திருவள்ளூரைச் சேர்ந்த 44 வயது மார்க்கெட் சுரேஷ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவர் தலைமறைவானதால் அவர் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சுரேஷ்க்கு திருவள்ளூரில் கள்ளக்காதலி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து திருவள்ளூரில் வசிக்கும் அவரது கள்ளக்காதலி உமாதேவியைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர்களின் சந்தேகம் உறுதிப்பட்டது. மேலும் அவர் அளித்த தகவலின் பேரிலும் சுரேஷை தேடி வந்தனர்.
அதன்படி புட்லூர் ரெயில் நிலையம் அருகே கூவம் ஆற்றிற்குள் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவர் தான் மார்க்கெட் சுரேஷ் எனத் தெரியவந்தது. அவரை பிடித்து வந்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள பல நகைக் கடைகளில் கைவரிசை காட்டியவர் மார்க்கெட் சுரேஷ் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மார்க்கெட் சுரேஷிடம் இருந்து 7 கிலோ வெள்ளியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்