விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு! சென்னை விமான நிலையத்தில் விடிய விடிய தவித்த பயணிகள்!
சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக அமெரிக்கா செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அதில் பயணம் செய்த 128 பயணிகள் இரவு முழுவதும் சென்னை விமானநிலையத்தில் தவித்தனர்.
சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக சிக்காகோவிற்கு நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்ல விருந்த விமானத்தில் 128 பயணிகள், 8 விமான ஊழியர்கள் மொத்தம் 136 பேருடன் விமானம் புறப்பட தயாரானது.
விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானி இயந்திரங்களை வழக்கம் போல் சரிபார்த்தார். அப்போது, விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுப்பிடித்தார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, அந்த விமானம் புறப்பாட்டை அதிகாரிகள் உடனே ஒத்திவைத்தனர்.
மேலும், விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமான பொறியாளா்கள் விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுப்பட்டனா்.
நள்ளிரவு 12 மணியாகியும் பணி முடியவில்லை. இதையடுத்து இதனால், விமானத்திற்குள் இருந்த பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு,விமானநிலைய பயணிகள் ஓய்வு பகுதியில் தங்கவைக்கப்பட்டனா். அதிகாலை 4 மணி வரை விமானத்தை சரிசெய்ய முடியாத நிலையில் விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். விமானம் பழுதுபார்க்கப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது