தஞ்சை பெரிய கோயில் சதய விழா. தமிழில் பூஜை செய்ய வேல்முருகன் கோரிக்கை
தஞ்சை பெரிய கோயில் சதய விழா. தமிழில் பூஜை செய்ய வேல்முருகன் கோரிக்கை
*விஸ்வரூபம் எடுக்கும் தஞ்சை பெரிய கோவில் சதய விழா! தமிழக அரசுக்கு தி.வேல்முருகன் கோரிக்கை*
தஞ்சைப் பெரிய கோவிலில் நடைபெற உள்ள சதய விழாவில் தமிழிலேயே தேவாரம், திருமந்திரம் ஓதி பூஜை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது பிறந்த நாள் சதய விழாவை வரும் 26 -ம் தேதி ஒருநாள் நிகழ்வாக நடத்திட தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.அப்போது வழக்கமாக நடைபெறும் பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை கொரோனாவை யொட்டி, தவிர்க்கப்பட்டுள்ளது சரியான நடைமுறையே.
இந்த விழாவில், மூலவரான பெருவுடையார் கருவறையிலும் மற்ற தெய்வ பீடங்களின் கருவறைகளிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதே மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு செல்லுத்தும் நன்றிக் கடனாகும்.
அருள்மிகு சிவன் திருக்கோவிலுக்குரிய தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதன்படி, தேவாரம், திருமந்திரம் ஓதி பூஜை செய்ய வேண்டும்.
எனவே, தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவில் பெருவுடையார் கருவறை உள்பட அனைத்து தெய்வங்களின் கருவறைகளிலும் தமிழ் மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
இது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோரிக்கை மட்டுமல்ல. பாஜக தவிர்த்து, அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.