*சென்னையில் இந்த ஆண்டில் இல்லாத அளவு ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை..! காரணம் இதுதான்..!*
சென்னையில் இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதற்கு வலிமையான இடி, மின்னலுடன் மழை பெய்ததே காரணம் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. குறிப்பாக மாலையில் வெறும் இரண்டரை மணி நேரத்தில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளித்தன.
அண்ணா சாலையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். உடனடியாக மருத்துவமனையில் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அகற்றினர்.
2015-ம் ஆண்டு சென்னையில் மேக பிளவு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதை நினைவுகூறும் விதமாக வியாழக்கிழமை ஒரே நாளில் பலத்த மழை பெய்துள்ளது. ஆனால், இதற்கு மேக பிளவு காரணம் அல்ல எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,வளிமண்டலத்தில் காற்று திசை மாறி வருவதாகவும், இதன்காரணமாக வலிமையான இடி மின்னலுடன் மழை பெய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், ஒரு நாள் பெய்த மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதாகவும், வடிகால்வாய்களை தூர்வார வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம் பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னையில் உலக வங்கி நிதியுதவியுடன் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டரரை ஆண்டுகளில் 25 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் தாங்கும் அளவுக்கு கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் பிரகாஷ் கூறினார்.