Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடத்தல் தங்கம் விற்ற சிபிஎம் கவுன்சிலர் கைது .

திருச்சியில் கடத்தல் தங்கம் விற்ற சிபிஎம் கவுன்சிலர் கைது .

0

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் கடத்தப்பட்ட தங்கத்தை திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த சிபிஎம் கவுன்சிலர் காராட்டு பைசலை சுங்க இலாகா இன்று கைது செய்தது.

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் பிடிபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அமீரக தூதரகத்தில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை முதலில் சுங்க இலாகாவும் பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த விசாரணையில் தங்க கடத்தலில் கேரளாவை சேர்ந்த பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஸ்வப்னா சுரேஷ் தலைமையிலான இந்த கும்பல் இதுவரை தூதரக பார்சல் மூலம் 300 கிலோவுக்கும் மேல் தங்கத்தை கடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த மூன்று மத்திய விசாரணை குழுக்களும் மிகத் தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த கடத்தலில் அமீரக தூதரகத்தை சேர்ந்தவர்களுக்கும், கேரளாவை சேர்ந்த மிக முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால் மத்திய அதிகாரிகள் மிகவும் கவனமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிரடியாக கோழிக்கோட்டை சேர்ந்த காராட்டு பைசல் என்ற ஒரு நகரசபை கவுன்சிலரை சுங்க இலாகா கைது செய்துள்ளது. இவர் கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளி நகர சபையில் சிபிஎம் கவுன்சிலராக உள்ளார்.

இவருக்கு சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் உள்பட கட்சியில் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

திருவனந்தபுரத்தில் இருந்து கடத்தப்படும் பெருமளவு தங்கத்தை திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவர் தான் அமீரக தூதரகம் மூலம் கடத்தப்படும் தங்கத்திற்கு பெருமளவு நிதி உதவி செய்துள்ளார். பைசலை சுங்க இலாகா அதிகாரிகள் கொச்சிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. கேரளாவில் ஆளுங்கட்சியான சிபிஎம் தலைவர்களுக்கு பைசல் மிகவும் நெருக்கமானவர் என்பதால் இவர் கைது செய்யப்பட்டது கேரள அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Leave A Reply

Your email address will not be published.