Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்துக்குள் நுழைந்த சிங்கள போலீஸ். புலனாய்வு துறையினர் விசாரணை.

தமிழகத்துக்குள் நுழைந்த சிங்கள போலீஸ். புலனாய்வு துறையினர் விசாரணை.

0

தமிழகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள போலீஸ் கைது செய்யப்பட்டார்; மத்திய மாநில புலனாய்வு துறையினர் விசாரணை.

ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று இரவு தனுஷ்கோடி கடற்கரைப்பகுதியில் ரோந்துசென்றபோது இலங்கையைச்சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்தில் ஊடுருவி தனுஷ்கோடி கடற்கரையில் முகுந்தராயர் சத்திரம் நோக்கி நடந்து செல்வதைப்பார்த்து அவரைப்பிடித்து விசாரணை செய்தனர்.

அவர் சிங்களத்தில் பேசினார். 30 வயதான இலங்கை இளைஞரை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க ( வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, ​​இலங்கை நண்பர் ஒருவர் ராமேஸ்வரத்தில் உள்ள தனது நண்பரை சந்திக்கப் போவதாகவும், அவருக்கு ஒரு சர்க்கரை ஆலையில் அல்லது தமிழ்நாட்டில் வேறு ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைக்கும் என்றும் கூறினார். எனவே அவர் மன்னார் வந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்ததாகக்கூறினார். சிங்கள மொழி பேசும் நபர் சில சதி அல்லது உளவு அல்லது சமூக விரோத செயல்கள் அல்லது ஏதோபிற காரணங்களுடன் ஏன் இங்கு வந்தார் என்பது குறித்து மொழிபெயர்ப்பாளர் மூலம் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு பிரிவு காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் இலங்கையில் போலீசாக பணியாற்றியுள்ளார் என்பதால் மத்திய, மாநில உளவுத்துறையினர் தீவிரவிசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு வழக்கறிஞர் ராமமூர்த்தி கூறுகையில்: நேற்று இரவு தனுஷ்கோடியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நடந்துவந்த சிங்களர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கைக்கு ஆவணங்கள் ஏதுமின்றி யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை நீடித்து வருகிறது அது போலவே ராமேஸ்வரம் தீவு பகுதிக்கும் இலங்கையிலிருந்து மர்ம படகில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையே தற்போது வரை நீடித்து வருகிறது. அதற்கு இன்றைய சிங்களர் ஊடுருவல் தகுந்த உதாரணமாக உள்ளது. மன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே மர்ம படகு சர்வீஸ் நடந்து வரும் நிலையில் இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேலும் இது போல சமூக விரோதிகள் தீவிரவாதிகள் ஊடுறுவி இருந்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க முடியாது. எனவே ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலோர பகுதியில் ஊடுருவல் நிறைந்த சந்தேகத்திற்கிடமான பகுதிகளான தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும், போலீஸ் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கடற்படை கடலோர காவல்படையின் தீவிர கண்காணிப்பைப்பலப்படுத்த வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாகும். அதை தொடராதபட்சத் தில் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறினார்.
தொடர் விசாரணையில் அவர் இலங்கை சியம்பலண்டவ அருகில் உள்ள மொனரகல பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமரபண்டாரா என்பதும், இலங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுமார் 12 மணி நேரம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2018 -ம் ஆண்டு இலங்கைக் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் காவலராகப் பணியில் சேர்ந்த பிரதீப் குமரபண்டாரா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பிடிக்கும் பணியில் அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் கடத்தல் கும்பல்களிடம் இருந்து கைபற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் அங்குள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில், 25 கிலோ ஹெராயினைத் திருடிய பிரதீப் குமரபண்டாரா, தனது அண்ணனிடம் கொடுத்துள்ளார். இத்தகவல் போலீஸாருக்குத் தெரியவந்த நிலையில், பிரதீப் குமரபண்டாராவைக் கைது செய்ய சென்ற நிலையில் அவர் தப்பிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த அவரது சகோதரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க தலைமன்னாருக்கு தப்பிவந்த பிரதீப் குமரபண்டாரா, அங்குள்ள மீனவரின் பிளாஸ்டிக் படகு மூலம் தனுஷ்கோடிக்கு தப்பிவந்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் கள்ளத்தனமாக படகில் வந்த பிரதீப் குமரபண்டாரா மீது தனுஷ்கோடி கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.